ஐபில் விவகார விசாரணையின் போது டோனி அளித்த வாக்குமூலம் தொடர்பான காணொளி ஆதாரத்தை பி.சி.சி.ஐ.யிடம் அளிப்பதற்கு உச்சநீதி மன்றம் மறுத்துள்ளது.
கடந்த ஐபில் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான குழு டோனி, சீனிவாசன் மற்றும் சுந்தர்ராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின்படி, பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் ஒதுங்க நேரிட்டது.
நேற்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், முத்கலிடம் மூன்று பேரும் அளித்த வாக்குமூல காணொளி மற்றும் எழுத்துப்பூர்வ பிரதிநிதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே பட்நாயக் மற்றும் ஜெ.எஸ்.கேஹர் அடங்கிய குழு காணொளி ஆதாரத்தை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 16ம் திகதி நடைபெறும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பி.சி.சி.ஐ.யிடம் ஒப்படைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.





