மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??

1341

ICC-World-Twenty20

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது.

பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை தொடர் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இரு மைதானங்கள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமல் காணப்படுவதோடு, அதன் பூர்த்தி மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையிலேயே பங்களாதேஷ் உலகக் கிண்ணத்தொடரை நடத்துவதற்குரிய வாய்ப்பை இழக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. வருடாந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே பங்களாதேஷின் உரிமை பறிக்கப்படுமாயின் இலங்கை அல்லது தென்னாபிரிக்காவில் இப்போட்டிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்ததாண்டு இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.