
2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான (50 ஓவர்) பாகிஸ்தான் அணியின் தலைவராக 40 வயதை நெருங்கும் மிஸ்பா உல்-ஹக் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் கூறுகையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் வீரர்களை திறம்பட வழிநடத்தி வரும் மிஸ்பா உல்-ஹக்கை தலைவர் பதவியில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை.
இப்போது அவர் மிகவும் அனுபவம் பெற்றுவிட்டார். தனிப்பட்ட முறையில் அவரது ஓட்டக் குவிப்பும் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது.
ஆனால் முகமது ஹபீஸ் விலகி விட்டதால் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கான அணிக்கு புதிய தலைவரை நியமிக்க ஆலோசனை நடந்து வருவது உண்மை.
அப்ரிடி, உமர் அக்மல், அகமது ஷேசாத் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுகின்றன.’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





