
தமிழில் தனது முதல் படமான 7ஆம் அறிவில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகத் திரைப்படத்துறையின் நம்பகமான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் துவங்க இருக்கும் இந்தப் புதிய படத்திற்கான பூஜை சென்னை நகர ஸ்டுடியோ ஒன்றில் வரும் 14ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பன்று நடைபெற உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகும் என்றும் தெரிய வருகின்றது.
வெங்கட் குழுவினர் ஸ்ருதியிடம் இந்த படத்தின் திரைக்கதையினைத் தெரிவிக்க, அதில் தனது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்த விதம் ஸ்ருதியை மிகவும் கவர்ந்தது. தனது நகைச்சுவைத் திறமையை வெளிக்கொண்டுவரும் விதத்தில் அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஸ்ருதி, தனது கால்ஷீட் திகதிகளை இதற்குத் தோதாக சரிபார்த்துக் கொண்டிருகின்றார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவுடன் அறிமுகப் படத்தில் நடித்துள்ளதால் இது அவருக்கு வசதியாக இருக்கும் என்று அவர் கருதுவதாகவும் தெரிகிறது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய முழு விவரங்கள் குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





