புத்தாண்டு தினத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் : குடிபோதையில் வாகனம் செலுத்திய 780 பேர் கைது!!

504

crime-sceneபுத்தாணடு தினத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிளிநொச்சி, ஊருபொக்க, ஹிக்கடுவ மற்றும் ரீதிகம ஆகிய இடங்களில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொல்பித்திகம பொரவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு பேருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோதிக் கொண்ட இருவரில் ஒருவரின் கழுத்தை ஏனையவர் நெரித்துக் கொலை செய்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி விஸ்வமடு பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊருபொக்க பொங்கம பிரதேசத்தில் மற்றுமொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹிக்கடுவ மானம்பிட்ட பிரதேசத்தில் போத்தல் ஒன்றினால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்துள்ளனர். ரிதிகம ஹெல்லவா பிரதேசத்தில் கழுத்தை வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குடிபோதையில் வாகனம் செலுத்திய 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் விசேட சோதனைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். கடந்த 10ம் திகதி முதல் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பண்டிகைக் காலத்தில் ஏற்படக் கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.