கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி குறித்து இந்திய பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுநீரக மோசடியால் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாழ்க்கையை இழந்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
திலீப் மாரு என்ற தனது சகோதரர் சிறுநீரக மோசடி காரணமாக கொழும்பில் உயிரிழந்ததாக அவரது சகோதரரான கணேஷ் ஹைதராபாத் மத்திய குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
வேலை தேடி விசாகப்பட்டினம் செல்வதாக கூறி திலீப் மாரு மார்ச் 22ம் திகதி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். வேலை தேடி கொழும்பு சென்றுவிட்டதாக 6 நாட்களுக்குப் பிறகு உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இரண்டு இளைஞர்களுடன் கொழும்பு சென்றுள்ளதாக மாரு கூறியதாக சகோதரர் கணேஷ் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாரு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் சடலம் உள்நாட்டு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் 30ம் திகதி இலங்கை பொலிஸ் நிலையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள மாருவின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மாருவின் உடலை உறவினர்கள் ஏப்ரல் 3ம் திகதி பெற்றுள்ளனர். எனினும் உயிரிழந்த திலீப் மாருவின் மின்னஞ்சல் கணக்கை பரிசோதித்த போது அவருடன் ஒருவர் சிறுநீரக விற்பனை குறித்து கருத்து பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல ராஜு என்பரே திலீப் மாருவை மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாகவும் சிறுநீரகத்தை விற்பனை செய்தால் 15 லட்சம் தரப்படும் எனக் கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை வருவதற்கு இலவச கொடுப்பனவு, தங்குமிட வசதி போன்றவை செய்து தரப்படும் என மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சிறுநீரக சிகிச்சையின் போதுதான் மாரு உயிரிழந்தாரா என்பது பற்றி இப்போதைக்கு கருத்து வெளியிட முடியாது. மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஆதாரத்தை கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





