வவுனியாவைச் சேர்ந்த மூவர் இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நிலையில் யுவதியின் சடலம் மீட்பு : இருவரை தேடும் பணி தொடர்கிறது!!

3096

இறம்பொடை நீர்வீழ்ச்சியில்..

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13.04) காலை மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியாவுக்கு நேற்று (12.04) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பகுதியான இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பேரூந்தை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர்.

திடீரென நீர்வீழ்ச்சியின் ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் வந்துள்ளனர்.

அதற்குள் 4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.