
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், பொலிசுக்கு பயந்து மணமகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் உமர் அக்மல் (23), பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது தான் இவரது வேலை. சமீபத்தில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்று பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டு மன்னிப்பு கேட்ட பின் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவரது திருமண நிகழ்ச்சிகள், லாகூரின் வெளிப்பகுதியில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டில் நடந்தது.
இரவு 10.00 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை தொடரக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், இரவு வெகுநேரமாக நடந்துள்ளது. தவிர, விருந்தில் ஏதாவது ஒரு வகை உணவுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. இதனையடுத்து ஹீர் காவல்நிலையத்தில் உமர் அக்மல் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதுகுறித்து இவரது சகோதரர்கள் கம்ரன் அக்மல், அத்னன் அக்மல் மற்றும் உறவினர்களிடம் பொலிசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் உமர் அக்மல், மணமகளுடன் அந்த இடத்தில் இருந்து தப்பித்துவிட்டார்.
எனினும் இவ்வழக்கு தொடர்பில் உணவு தயாரிப்பாளர், பண்ணை வீடு உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுஇரவில் தலைமறைவான உமர் அக்மலை பொலிசார் தேடி வருகின்றனர்.





