வடக்கிலிருந்து மடு திருத்தலம் நோக்கி பக்தர்களின் நடைபயணம் ஆரம்பம்!!

965

நடைபயணம்..

மன்னார் மடுமாதா ஆலயத்தின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் ஆரம்பமாகியுள்ளது.

பக்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று பாண்டியன்குளம், நட்டன்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதயாத்திரையாக செல்கின்றார்கள்.

மடு திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்!
முல்லைத்தீவு – இரணைப்பாலை, வற்றாப்பளை பகுதிகளில் இருந்து அதிகளவிலான மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த கோவிட் தொற்று காரணமாக ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இந்த வருடம் அதிகளவான மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மன்னார் எல்லை கிராம பாதையான பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.