550 சவரன் நகைகள் திருட்டு… வழக்கில் மாடல் அழகி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

454

சென்னையில்..

சொந்த வீட்டிலேயே 550 சவரன் தங்க நகைகளை திருடி அதை மாடல் அழகிக்கு ஃபைனான்ஸியர் சேகர் கொடுத்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் சேகர் (47) மீதும், அவரின் தோழி சுவாதிமீதும் புகாரளித்தார்.



அதில், தன்னுடைய மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும் அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும், 100 கிராம் எடையுள்ள ஏழு தங்கக் கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் சேகர் திருடி, சுவாதியிடம் கொடுத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவுசெய்து சேகரையும் சுவாதியையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆனால் தங்க நகைகளை பறிமுதல் செய்ய முடியவில்லை. இதையடுத்து இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து பூந்தமல்லி போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பூந்தமல்லி போலீஸார் கூறுகையில், “550 சவரன் தங்க நகைகள் திருட்டு வழக்கில் கைதான மாடல் அழகி சுவாதியையும் ஃபைனான்ஸியர் சேகரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். அப்போது சேகர், எவ்வளவு பணம், தங்க நகைகளை சுவாதியிடம் கொடுத்த விவரங்களைக் கூறினார்.

அதனடிப்படையில் சுவாதியிடம் விசாரித்தபோது அவர், `என்னுடன் பழகியதற்காக நகைகள், பணத்தை சேகர் கொடுத்தார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை சேகரின் குடும்பத்தினர் என்னை மிரட்டி வாங்கிக் கொண்டனர்.

மீதமுள்ள தங்க நகைகளையும் பணத்தையும் என்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து மாலத்தீவு, கோவா என சுற்றியதில் செலவு செய்து விட்டேன். என்னிடம் எந்த நகையும் பணமும் இல்லை’ என்று கூலாக தெரிவித்தார். சுவாதியின் ஆண் நண்பர் குறித்து விசாரித்தபோது அவன் பிளேபாய் எனத் தெரியவந்தது.

சுவாதி கைதுசெய்யப்பட்டவுடன் அவன் தலைமறைவாகி விட்டான். அவன் தங்கியிருந்த அரும்பாக்கம் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளோம். மேலும் சுவாதி அளித்த தகவலின்படி பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள (Ducati Bike) டூகாட்டி என்ற விலை உயர்ந்த பைக் ஒன்றையும் புல்லட் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.

அதோடு 100 கிராம் தங்க நகைகளையும் சிரமப்பட்டு பறிமுதல் செய்திருக்கிறோம். சேகரிடம் வாங்கிய தங்க நகைகள், பணத்தை சுவாதி, தன்னுடைய ஆண் நண்பரிடம் கொடுத்து வைத்துள்ளார். அதனால் அவனைத் தேடி வருகிறோம். அவன் சிக்கினால் மட்டுமே தங்க நகைகள், பணம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.

சுவாதியின் குடும்ப பின்னணியையும் விசாரித்தபோது அவரின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அம்மா, குடும்ப தலைவியாக உள்ளார். சுவாதிக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாதிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. சுவாதியின் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். சேகரிடமிருந்து வாங்கிய பணம், சுவாதியின் குடும்பத்தினரிடம் உள்ளதா என்று விசாரித்தபோது எந்தவித தகவலும் கிடைவில்லை.

சுவாதியின் ஆண் நண்பருக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர்கள் மூலம் சுவாதியின் ஆண் நண்பரைப் பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

சுவாதி கொடுத்த பணத்தில்தான் விலை உயர்ந்த பைக்கை வாங்கி அதில் இருவரும் வலம் வந்த தகவலும் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சுவாதி பணம் பறிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது” என்றனர்.