குடியாத்தத்தில்..
அரசுப் பள்ளியின் தையல் ஆசிரியை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே, தந்தையை பறிகொடுத்த மகன், தாயையும் இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் கார்டன் 2-வது கிழக்குச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. வயது 56. இவர் கணவர் தெய்வசிகாமணி அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார். 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் இறந்துவிட்ட நிலையில், மகன் விக்னேஷுடன் நாகேஸ்வரி வசித்து வந்தார்.
இந்த நிலையில், நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நாகேஸ்வரி நேற்று மாலை தன் வீட்டு படுக்கையறையிலிருக்கும் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, தாய் தற்கொலைக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகன் விக்னேஷ், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அந்த மனுவில், ‘‘என் அம்மா தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பள்ளியில், பணி செய்யவிடாமல் தலைமை ஆசிரியர் ஒருமையில் பேசி துன்புறுத்தியிருக்கிறார். இது குறித்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். மன உளைச்சலில் இருந்த அம்மாவுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
கடந்த 12 நாள்கள் மருத்துவ விடுப்பிலிருந்தார். விடுப்பு முடிந்து நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற அம்மாவை, தலைமை ஆசிரியர் ஒரு மணி நேரம் நிற்க வைத்திருக்கிறார்.
அம்மா கொடுத்த மருத்துவச் சான்றிதழையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று மதியம் 2:30 மணிக்கு தூக்குப் போட்டுக் கொண்டார். அந்த சமயம், ‘என்னை கோயிலுக்கு சென்று வா..’ என்று கூறி வெளியில் அனுப்பிவிட்டார். திரும்பி வந்த பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
பின்புறமாக சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். என் அம்மாவின் சாவுக்குக் காரணமான தலைமை ஆசிரியர்மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்று கூறியிருந்தார். புகார் மனுவை ஏற்றுகொண்ட போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.