அதிக விலைக்கு முட்டை விற்றால் ஐம்பது இலட்சம் ரூபா அபராதம்!!

960

முட்டை..

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக இன்று (22ஆம் திகதி) முதல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.



அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகளுக்கு குறைந்தபட்ச அபராதம் ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு குறைந்தபட்ச அபராதம் ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கடந்த 19ஆம் திகதி நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டது.

எவ்வாறாயினும், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய தயாராக இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 49 ரூபா 50 சதம் செலவாகும் எனவும், அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் வழங்கப்படும் விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முட்டை உற்பத்தியாளர்கள் நேற்று (20ம் திகதி) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடி முட்டை ஒன்றின் விலையை ஐந்து ரூபாவினால் குறைக்கும் தீர்மானத்திற்கு வந்துள்ளதுடன், அதன்படி இன்று (22ம் திகதி) முதல் முட்டையொன்றை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு முட்டையை உற்பத்தி செய்த 14 நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டும், அந்த எண்ணிக்கைக்கு பிறகு அது சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அதன்படி, நுகர்வோர் முட்டையை வாங்காமல், கடும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

மேலும் முட்டை விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாளொன்றுக்கு 20 லட்சம் வரை முட்டை விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 65 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விலை அதிகரித்துள்ளதுடன் காரணமாக 45 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-