பேருந்தில் செல்லும் போது தாயின் மடியில் உயிரிழந்த சிறுவன் : உயிருக்கு உலைவைத்த குளிர்பானம்?

691

சென்னையில்..

பேருந்தில் பயணம் செய்த போது தாய் வாங்கிக் கொடுத்த குளிர்பானம் மற்றும் சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் பேருந்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை மயிலாப்பூர் பிவிகே தெருவை சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் மகன் அந்தோணி ஜான் லோஷன் (14). இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், குடும்பத்தாருடன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை மீண்டும் சென்னைக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.


மதுரை பேருந்து நிலையம் அருகே பேருந்து நின்றபோது அங்கிருந்த ஒரு கடையில் சிப்ஸ் மற்றும் பாட்டில் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட மாணவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

உறவினர்கள் தண்ணீர் கொடுத்து சிறுவனை உறங்க வைத்துள்ளனர். பின்பு விக்கிரவாண்டி அருகே வந்த போது சிறுவனை எழுப்பியதில் எந்தவித சுயநினைவுமின்றி இருந்துள்ளார்.

திண்டிவனம் பேருந்து நிறுத்தத்தில் சிறுவனை எழுப்பிய போது இரண்டு முறை பெருமூச்சு விட்ட நிலையில், அதன்பின்பு எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்ததால் உறவினர்கள் பேருந்தில் கதறியழுதுள்ளனர்.

பின்பு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டு சென்றனர். அங்கு சிறவனை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த மாணவன் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானம், சிப்ஸ் சாப்பிட்டதால் புட்பாய்சன் ஏற்பட்டு மாணவன் இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.