வரிசையில் நிற்காமல் வாக்குச்சாவடிக்குள் சென்ற சிரஞ்சீவி : மக்கள் எதிர்பால் மீண்டும் வரிசையில் நின்றதால் பரபரப்பு!!(வீடியோ)

636

chiranjeevi

நாடாளுமன்ற தேர்தலுக்கான 7ஆம் கட்ட தேர்தல் நேற்று 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெற்றது. முதன் முறையாக புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அம்மாநில சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் ஐதராபாத் மக்களவை தொகுதிக்குட்பட்ட கைராதாபாத் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார்.

அப்போது வாக்காளர்களுக்கான வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களிக்க சிரஞ்சீவி சென்றுள்ளார். அவரை இடைமறித்த வெளிநாடு வாழ் இந்தியரான வாக்காளர் ஒருவர், வரிசையில் நின்று வாக்களிக்க செல்லுமாறு வலியுறுத்தினார். இருவருக்குமிடையே சற்று நேரம் வாக்குவாதம் நீடித்தது.

பின்னர் சிரஞ்சீவி வரிசையில் நின்று வாக்களிப்பதாக கூறியதுடன் வரிசையில் போய் நின்றார். அதன் பின் வரிசையில் சென்று தனது வாக்கினை அவர் பதிவு செய்தார். சிரஞ்சீவியை வழிமறித்த வாக்காளரிடம் இது குறித்து கேட்டபோது, வி.ஐ.பி என்ற வரிசையில் சிரஞ்சீவி வேண்டுமானால் வாக்குச்சாவடிக்குள் நேரடியாக வாக்களிக்கலாம்.

ஆனால் அவரது ஒட்டு மொத்த குடும்பமும் எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். சீரஞ்சிவிக்கு எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கு ஆதரவாக அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.