பெங்களூருவில்..

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் 50 வயதான சசிலேகா. இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உயிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 வயது ஷாந்தகுமாரியும் மகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார்.

ஷாந்தகுமாரி நம்பிக்கைகள் ,சடங்கு ஆச்சாரங்களில் தீவிர பற்று கொண்டவராக இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் முறையாக சடங்குகள் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதில்லை என மகள் மற்றும் பேரனை அடிக்கடி கடிந்து கொள்வாராம்.

அதேபோல், வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல ரூல்ஸ்களை பாட்டி விதித்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பேரன் மற்றும் பாட்டிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவ தினமான 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். இது பாட்டிக்கு பிடிக்காமல் பேரனை கண்டித்து திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் பாட்டியை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்துள்ளார். அப்போது அவரது தாய் சசிலேகா, சஞ்சய்யின் நண்பர் நந்தேஷும் உடன் இருந்துள்ளனர்.

தாக்குதலில் பாட்டி எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால் அதை அப்படி மறைக்க வீட்டின் கூரையில் பாட்டியின் உடலை சிமெண்ட் வைத்து மூடி மறைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என பாட்டி தனது சொந்த ஊரான சிவமோகாவுக்கு சென்றுவிட்டார் என அக்கம்பக்கத்தினிரடம் சசிலேகா கூறியுள்ளார்.

பின்னர் அடுத்த சில மாதங்களில் சசிலேகாவும், மகன் சஞ்சய்யும் வீட்டை காலி செய்துள்ளனர்.பின்னரை வீட்டை புனரமைப்பு செய்ய வீட்டின் முதலாளி வேலை செய்த போது தான் அழுகிய நிலையில் பாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை தடயங்களை திரட்டி விசாரணை நடத்தியதில், முதலில் சஞ்சய்யின் நண்பர் நந்தேஷ் சிக்கினார். பின்னர் நந்தேஷ் அளித்த வாக்குமூலம் மூலம் குற்றச் சம்பவத்தை தெரிந்துகொண்ட காவல்துறை முக்கிய குற்றவாளி சஞ்சய் அவரது தாயாரை தேடிவந்துள்ளது.

காவல்துறையின் நீண்ட முயற்சிக்குப் பின்னர் Know Your Customer தகவலை வைத்து மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சஞ்சய் மற்றும் சசிலேகாவை கைது செய்தனர்.

கொலை செய்த காலத்தில் ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் மாணவராக சஞ்சய் இருந்துள்ளார். சிறப்பாக படிக்கும் அவர், தேர்வுகளில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் கொலை சம்பவத்திற்கு பின் மாட்டிக்கொள்ளக்கூடாது என வேறு இடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கி தற்போது ஹோட்டலில் வெயிட்டாரக பணியாற்றியுள்ளார்.

அதேபோல், தாய் சசிலேகாவும் வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை குற்றத்தை கண்டுபிடித்த பெங்களூரு காவல்துறை கைதான மூவரையும் சிறையில் அடைத்துள்ளது.





