
பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் வெலிமடை டர்வின் தோட்டை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 8 மற்றும் 5 வயதான பிள்ளைகள் இருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர், பெண்ணின் கணவர் பெண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த மூன்றாம் திகதி மதியம் வேலைக்கு சென்று திரும்பிய இந்த பெண் தனது வீட்டில் இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து குடும்ப சுகாதார அதிகாரிக்கு பிரதேசவாசிகள் தெரியப்படுத்தியதை அடுத்து, சுகாதார அதிகாரின் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சந்தேக நபரான அந்தப்பெண் வீட்டு முற்றத்தில் எதனையோ தேடிக் கொண்டிருந்ததுடன், குடும்ப சுகாதார அதிகாரியை கண்டதும் வீட்டுக்குள் ஓடியுள்ளார்.
இதன் பின்னர் வீட்டை சோதனையிட்ட போது அலுமாரியில் இருந்து ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வெலிமடை வைத்தியசாலையில் சம்பந்தப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலை அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து வெலிமடை பொலிஸார் பெண்ணை கைது செய்ததுடன், சிகிச்சைக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.





