ஆற்றுக்குள் மாணவனை இழுத்து சென்ற முதலை : நண்பர்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்!!

572

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதான திருமலை. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வருகிறார். அவர் நேற்று மாலை அதே ஊரில் வசித்து வரும் மற்ற சில நண்பர்களுடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.

நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக்கொண்டே ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென முதலை வரும் சத்தம் கேட்டது. உடனே நண்பர்கள் கூச்சலிட்டுக்கொண்டே கரையேறினர். குளிக்க பயன்படுத்திய சோப்பு ஆற்றில் விழுந்துவிட்டது.

இதனை எடுக்க திருமலை ஆற்றில் இறங்கினான். அப்போது ஆற்றுக்குள் இருந்த முதலை திருமலையின் காலை பிடித்து இழுத்துச் சென்றது. அவருடைய நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து முதலையை துரத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனாலும் முதலை திருமலையை விடாமல் ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. உடனடியாக தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் உடனடியாக வந்து தேடத்தொடங்கிய நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் ஒரு புதரில் இருந்தது.

திருமலையின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட உதவி கலெக்டர், காவல் உதவி கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு நடத்தினர்.

இப்பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் ஆற்றில் குளிக்கும் போது முதலை தாக்குதலால் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடன் மாலையில் குளிக்க சென்ற மாணவன் சற்று நேரத்தில் முதலையால் உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.