ஜார்க்கண்டில்..

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வரதட்சணை கேட்டு தகராறு ஏற்பட்டதில், மனைவியின் முகத்தில் கணவன் திராவகத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் கான். இவர் தனது மனைவி ஹினா பர்வீனுடன் அதேபகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

தனக்கு இருசக்கர வாகனம் தேவை என மனைவியிடம் கூறிய அமீர் கான், அதற்காக 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமனாரிடம் இருந்து வாங்கி வரும்படி கேட்டுள்ளார். ஆனால் ஹினா அதற்கு செவி சாய்க்கவில்லை என தெரிகிறது.

இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அமீர் கானின் துன்புறுத்தலைத் தொடர்ந்து தனது தந்தை வீட்டிற்கு சென்ற ஹினா, கணவருக்காக பணம் கேட்டுள்ளார். விரைவில் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில் கணவர் வீட்டிற்கு சென்ற ஹினா , தந்தை கூறியதை அமீர் கானிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பணம் உடனடியாக கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அமீர் கான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த திராவகத்தை மனைவியின் முகத்தில் வீசியுள்ளார். திராவக வீச்சினால் ஹினா அலறித் துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ஹினாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் அமீர் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஹினாவின் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் திராவகம் பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது வாய்க்குள் திராவகம் சென்றதால் அவரால் பேச முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அமீர் கானை வலைவீசி தேடி வருகின்றனர். வரதட்சணை கேட்டு மனைவியின் முகத்தில் கணவன் திராவகத்தை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





