திருச்சியில்..
தாய், மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கார் டிரைவர்
மன அழுத்ததால் தற்கொலை செய்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் ஒரு சிலர் தனது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் தான் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் தாய், மகனை கொலை செய்துவிட்டு கார் ஓட்டுனர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் என்ற 8 வயது மகன் இருந்தார்.
இந்நிலையில் இங்கு வருமானம் போதவில்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.
அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றார். அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று காலை அவரது மனைவி வசந்த பிரியா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டு பின்னர் மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மாமியார் வசந்தா, மகன் சாமிநாதன், கணவர் கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்.
எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். தாயும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன்.
என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.