தூத்துக்குடியில்..

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடி, லாரி மோதியதில் சக்கரத்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் பாபிலோனா (வயது 23). சென்னை, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார்.

அதே போல், ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் பிரசாத் (32). சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்து, திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதித்தனர். இரு வீட்டு பெரியவர்களின் முன்னிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டது, திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் இருந்த காதலி பாபிலோனாவை, தனது மோட்டார் சைக்கிளில் பிரசாத் அழைத்து கொண்டு, அவரது அறையில் விடுவதற்காக கிண்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவர்களது மோட்டார் சைக்கிள் அரும்பாக்கம், மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்ற போது, கோயம்பேட்டில் இருந்து வடபழனி நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த டிரெய்லர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

திடீரென எதிர்பாராத இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த காதல் ஜோடி இருவருமே நிலைக்குலைந்து கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் காதல் ஜோடியான பிரசாத்-பாபிலோனா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான டிரெய்லர் லாரி ஓட்டுநர் பொன்னன் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விரைவில் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில், காதல் ஜோடி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.





