நடுவீதியில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

428

சென்னையில்..

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டிருந்த மாணவர்கள் தாமஸ், ஜோஷ்வா இருவரும் தாம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அதிவேகம் காரணமாக நிலைத்தடுமாறி, சரேலென நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.



இந்த விபத்தில், பின்னால் வந்த லோடு வேன் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கயல் தாமஸ் (18). இவர் தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சமுக பணி படித்து வந்தார்.

அதே கல்லூரியில் அனகாபுத்துரை சேர்ந்த கிளமன் ஜோஷ்வா (17) என்பவரும் இளங்கலை முதலாம் ஆண்டு சமுக பணி படித்து வந்தார். இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள்.

இந்நிலையில் தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் மெப்ஸ் சிக்னலிலிருந்து புறப்பட்டு வேகமாக சென்றுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி இருவரும் சாலையில் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது பின்னால் வந்த ஈச்சர் வேன் கீழே விழுந்த இருவர் மீதும் ஏறி இறங்கியதில் தலை மற்றும், தோள்பட்டை நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் நேற்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே தங்களது நண்பர்கள் சாலை விபத்தில் இறந்த தகவல் அறிந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மொத்தமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.