
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி இலங்கை அகதிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இலங்கை அகதி முகாமில் இருந்த 62 வயதான பெலிசிட்டா குரூஸ், நேற்று முன்தினம் அதே பகுதியில் முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பொலிசார் அவரது உடலைக் கைப்பற்றி கோவை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியைக் கொன்றவர்களை கைது செய்யக் கோரி இலங்கை அகதிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை பொலிசார் அப்புறப்படுத்த முயன்றதால் ஆத்திரமடைந்த சிலர், பொலிசாரின் வாகனத்தின் மீது கற்களை வீசினர். இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து உடல் எடுத்து வரப்பட்ட நிலையில், உடலை சாலையில் வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி, மூதாட்டி கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





