எதிர்க்கட்சி இன்றி அமையப்போகும் இந்திய நாடாளுமன்றம் : 10% இடங்களைக் கூட வெற்றி பெறாத காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோனது!!

585

Congressபிரதான எதிர்க்கட்சியாக கூட காங்கிரசால் வரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளபோதிலும், இந்திய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை முன்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 1952ம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது முதல் 1977ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அமைந்த ஐந்து நாடாளுமன்றங்களிலும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் எந்த கட்சியும் இல்லை. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

முதல் நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது நாடாளுமன்ற மொத்த சீட்டுகள் 489தான். இந்திய அரசியல் சாசனப்படி மொத்த சீட்டில் 10ல் ஒருபங்கு தொகுதிகளை வென்றால்தான், அந்த கட்சியை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியும்.

எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. நாடு முதன் முதலாக காங்கிரசில் இருந்துதான் எதிர்க்கட்சி தலைவரை பார்த்தது. 1975ம் ஆண்டு இந்திராகாந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியால் 1977ல் அக்கட்சி தோற்றது. அப்போது காங்கிரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.

இப்போது மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நாடாளுமன்றத்தை இந்தியா பார்க்க உள்ளது. ஏனெனில் மொத்தமுள்ள 543 சீட்டுகளில் 10ல் ஒரு பங்கான 54 சீட்டுகளைக் கூட காங்கிரஸ் பெறவில்லை.