
ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் யான். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி ஜோடியாக நடித்துள்ளனர்.
நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை கூகுள் + ஹேங் அவுட் மூலமாக வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து யான் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய யான் படத்தின் நாயகன் ஜீவா நான் நடித்த படங்களிலேயே யான் ஒரு வித்தியாசமான படம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்ப்பவர்கள் நிச்சயம் மீண்டும் ஒரு தடவை வந்து படத்தைப் பார்ப்பார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு மொராக்கோவில் நடந்தது.
பல பிரபலமான ஹொலிவுட் படங்களின் ஷூட் நடந்த லெகேஷன்களில் யான் படத்தை எடுத்திருக்கிறோம். அங்கு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி உள்பட அனைத்து காட்சிகளும் அட்டகாசமாக வந்துள்ளது என்று புளகாங்கிதப்பட்ட ஜீவாவிடம், உங்கள் படங்களில் நீங்கள் குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைப்பது இளைஞர்கள் பலரை தவறாக வழி நடத்துகிறது. உங்களைப்போன்ற கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு தேவை இல்லையா என்று ஒரு நிருபர் கேட்க, ஜீவாவின் முகத்தில் டென்ஷன்.
கதைக்கு என்ன தேவையோ அதைம்தான் நான் செய்கிறேன். சிவா மனசுல சக்தி படத்தில் அந்த மாதிரி கரக்டர் அமைந்தது. அதன் பிறகு நானும் குடிக்காமல், புகை பிடிக்காமல் நிறைய படங்களில் நடித்து விட்டேன். அதை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனாலும் சிவா மனசுல சக்தி தான் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறது. படத்தின் கதாபாத்திர தன்மையைத்தான் நான் பிரதிபலிக்கிறேன். எனக்கும் நிறையவே சமூக பொறுப்பு இருக்கிறது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி படம் எடுக்கும்போது சிகரெட் இல்லாமல் எடுக்க முடியுமா என்றார்.
அப்போது மைக்கை வாங்கிய பாடலாசிரியர் தாமரை, குடி மற்றும் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படங்களை எடுக்க நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பளர்கள் முன்வர வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இப்படிப்பட்ட படங்களை எடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.





