மதுரையில்..
மதுரையில் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கணவர் ஒருவர் போலீஸீல் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் பழனி. எம்பிஏ பட்டதாரியான இவர் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.
ஆனால், அந்த பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஆகி சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த சூழ்நிலையில், பிரிந்து சென்ற பெண்ணுடைய குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழனி பழகி வந்திருக்கிறார்.
நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இது வீட்டினருக்கு தெரியவரவே பெண் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் பழனியும் அவரது காதலியும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனியாக வாடகை வீட்டில் இந்த தம்பதி குடியேறியுள்ளது. திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பழனியின் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து தனது மனைவியுடன் வாழ விருப்பப்படுவதாக பழனி தெரிவிக்க, இதுகுறித்து அப்பெண்ணின் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து பழனியுடன் வாழ விருப்பமில்லை என காவல்நிலையத்தில் அந்த பெண் தெரிவித்ததை தொடர்ந்து சட்டப்படி விவாகரத்து பெற காவல்துறையினர் ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண் தனது வாட்சப்பில் மறுமணம் குறித்து ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த பழனி, தனது மனைவியை தேடி சென்றிருக்கிறார்.
அப்போது, கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தனது மனைவியுடன் பழனி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் கைமீறி சென்றதாகவும், தனது மனைவியை பழனி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து கீரைத்துறை காவல்நிலையத்தில் பழனி சரணடைந்திருக்கிறார்.
இந்த கொலை குறித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிந்துசென்ற மனைவியை கொலை செய்ததாக கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் மதுரை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.