நாம் பிரிவதுதான் இருவருக்கும் நல்லது… கடத்தப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ.. கதறும் கணவர்!!

579

தென்காசியில்..

தென்காசி மாவட்டத்தில் புதுப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக அடுத்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அவரை மீட்க போலீஸார் தனிப்படைகள் அமைத்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து வீடியோ வெளியாகிவருகிறது.



தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித். மென்பொறியாளரான இவர், தன்னுடன் பள்ளிக்காலத்திலிருந்து சேர்ந்து படித்தவரான கிருத்திகா படேல் என்பவரைக் காதலித்திருக்கிறார்.

கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், குற்றாலத்தில் மரம் அரவை ஆலை நடத்திவருவதால், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் குற்றாலத்தில் வசிக்கிறார்.

தமிழரான மாரியப்பன் வினித்துடன், குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருத்திகா பழகிவருவது நவீன் படேலுக்கு தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் டிசம்பர் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய கிருத்திகா, மாரியப்பன் வினித்துடன் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் வினித் வீட்டில் இருவரும் வசித்துவந்திருக்கின்றனர். இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்ததால், ஜனவரி 4-ம் தேதி இருவரும் குற்றாலம் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு மாரியப்பன் வினித்துடன் செல்ல விரும்புவதாக கிருத்திகா தெரிவித்ததால் அவருடன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

பின்னர், ஜனவரி 25-ம் தேதி இருவரும் காரில் சென்றபோது, அங்கு வந்த கிருத்திகாவின் தந்தை நவீன் படேல் மற்றும் உறவினர்கள், வினித்தை அடித்துவிட்டு வலுக்கட்டாயமாக கிருத்திகாவை காரில் கடத்திச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் குற்றாலம் காவல்துறையினர் நேர்மையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே தன்னுடைய மனைவியை மீட்டுத்தரக்கோரி டி.ஜி.பி உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மாரியப்பன் வினித் புகார் அனுப்பினார். அதையடுத்து, தென்காசி மாவட்ட காவல்துறையினர், ஐந்து தனிப்படைகள் அமைத்து புதுமணப் பெண் கிருத்திகாவைத் தேடிவருகின்றனர். இதுவரை அவரை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. அவர் இருக்கும் இடமும் தெரியவில்லை.

பெற்றோரால் கடத்திச் செல்லப்பட்ட கிருத்திகா எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், முதலில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தனக்கும் உறவினரான மைத்ரிக் படேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமணம் நடந்துமுடித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

கணவர், குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர், தன்னுடைய பெற்றோர்மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி செல்போன் மூலமாகவும் மாரியப்பன் வினித்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் மீண்டும் கிருத்திகா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், “என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நான் விரும்பியே என்னுடைய பெற்றோருடன் சென்றேன். நான் வினித் வீட்டில் இருந்தபோது, என்னுடைய பெற்றோரிடமிருந்து பணம் வாங்கிவருமாறு வற்புறுத்தினார்கள்.

அதோடு, என் பெற்றோர்மீது போலீஸிலும் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகாரளித்திருக்கின்றனர். அது பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. தற்போது கணவரின் தொந்தரவு இல்லாமல் இருக்கிறேன்.

நாம் இருவரும் அவரவர் வழியில் போவதுதான் இருவருக்கும் நல்லது. இருவரின் குடும்பத்துக்கும் நல்லது. அதனால் என் குடும்பத்தினர்மீது கொடுத்திருக்கும் புகார்களை உடனே வாபஸ் வாங்க வேண்டும். அதுதான் இருவரின் குடும்பத்துக்கும் நல்லதாக இருக்கும்” என கிருத்திகா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அவர் ஏதோ நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மாரியப்பன் வினித், தன் மனைவியை மீட்டுக் கொடுக்க வேண்டும் என போலீஸாரை வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கண்ணீர் மல்க வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். அது தொடர்பான விசாரணைக்கு வந்தபோது கிருத்திகாவின் பெற்றோர், அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததாகத் தெரிவிக்கவில்லை.

இப்போது வழக்கு, கைது ஆகியவற்றுக்குப் பயந்து கிருத்திகாவைக் கடத்திச் சென்று மிரட்டி ஏதேதோ பேசவைத்திருக்கிறார்கள். கிருத்திகா உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை சீக்கிரம் மீட்டு என்னிடம் சேர்க்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

தென்காசி மணப்பெண் கடத்தல் சம்பவத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் சர்ச்சையைக் கிளப்பிவருகின்றன. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸாருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.