நடுவானில் விமானத்தில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை வைத்தியர்!!

963

நடுவானில்..

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து விமானத்தில் கொழும்பு நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் உயிரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே காப்பாற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 85 வயதுடைய வயோதிப் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது ​​மருத்துவர் அல்லது மருத்துவ உதவி வழங்கக் கூடிய நபர் இருந்தால் தங்கள் குழுவினருக்குத் தெரிவிக்குமாறு விமானப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்போது விமானத்தில் பயணித்த வைத்தியர் மனோரி கமகே சிகிச்சையளிக்க முன் வந்து மூச்சு விடுவதில் சிரமப்பட்ட வயோதிப பெண்ணுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்கினார்.

அதன்படி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலமுறை ஒக்சிஜன் வழங்கவும் இன்ஹேலர் மூலம் மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விமானத்தில் இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எதுவும் இல்லை இதன்போது அங்கு ஒரு பயணியின் ஸ்மார்ட் கடிகாரம் மூலம் வயதான பெண்ணின் இரத்தத்தில் உள்ள ஒக்ஸிஜன் அளவை கணிப்பிட்டதுடன் மற்றொரு பயணியிடம் இருந்த ஆஸ்பிரின் மருந்தை நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளர்.

நோயாளியிடம் இருந்த இன்ஹேலர் பலமுறை செலுத்தப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் ப்ரெட்னிசோலோன் சிரப் இனையும் கொடுத்து வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். வயோதிபப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த இலங்கை வைத்தியருக்கு விமானத்தில் இருந்த பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.