சென்னையில்..
எனக்கு கிடைச்ச அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க.. என்னைப் பற்றி கவலைப்படாதீங்க.. நீங்க ப்ளான் பண்ணப்படியே யூரோப் டூர் கிளம்புங்க.. என்று உருக்கமாக தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்து விட்டு, பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் சென்னையைச் சேர்ந்து மருத்துவ கல்லூரி மாணவி நித்யஸ்ரீ.
செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், தேர்வு சரியாக எழுதாததால், தோல்வி பயத்தில் தற்கொலைச் செய்து கொண்டதாக தெரிய வந்த நிலையில், போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
நீங்க மன அழுத்தம் கொரோனா காலத்துக்கு பின்பு, மக்களிடையே அதிகரித்துள்ளதாக மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனம் விட்டு பேசுங்கள். தற்கொலை தீர்வாகாது.
சென்னையில், மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி, 10வது மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள கே.ஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம சுப்பு (64). அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ராமசுப்பு 10வது தளத்தில் வசித்து வருகிறார்.
ரயில்வே துறையில் ஏஜிஎம் ஆக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ராமசுப்பு, தற்போது சென்னை மெட்ரோ ரயில்வேயில் அட்வைஸ்ராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ராமசுப்புவுக்கு இரண்டு மகள்கள்.
மூத்த மகள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மகள் நித்யஸ்ரீ (22) சென்னை கே.கே நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலையில் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நித்யஸ்ரீ, சிறிது நேரத்தில் திடீரென தனது வீட்டின் 10வது மாடி படிக்கட்டில் இருந்த ஜன்னல் வழியாக மேலேயிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் இறங்கினார்.
அத்தனை உயரத்தில் இருந்து கீழே குதித்ததில், உடல் சிதறி மாணவி நித்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் அலறம் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், நித்யஸ்ரீ மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டதைப் பார்த்து அலறியடித்தனர்.
அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், உடனே அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மாணவி நித்யஸ்ரீயின் கடிதத்தில், “எனக்கு கிடைத்த அப்பா, அம்மா நல்லவர்கள். அடுத்த மாதம் நீங்கள் திட்டமிட்டபடியே யூரோப் சுற்றுலா சென்று வாருங்கள். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கல்லூரியில் மூன்றாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நித்யஸ்ரீ இந்த தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை என்றும், தேர்வில் தோல்வியடைந்து அரியர் வைத்து விடுவோமோ என்கிற பயத்தில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
தனது தற்கொலைக்கான காரணம் எதையும் மாணவி கடிதத்தில் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாணவியின் தற்கொலைக்கு தேர்வு பயம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் பெற்றோர் மற்றும் மாணவியின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.