அசாமில்..
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் அமர்ஜோதி- பந்தனா கலிதா தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பந்தனா கலிதா காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் ஷங்கரியை காணவில்லை என கூறியிருந்தார்.

இதனையடுத்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடினர். எனினும் எந்த தகவலும் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் பந்தனா கலிதா மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து பந்தனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதிதல் அளித்ததால் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவர் அமர்ஜோதி வேலையின்றி இருந்ததால், வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதேநேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக சேர்ந்த பந்தனாவுக்கு அங்குவந்து செல்லும் ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஒரு நண்பருடன் திருமணத்திற்கு மீறிய உறவிலும் இருந்துள்ளார். அவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பந்தனா கலிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என இவரது மாமியார் தடுத்துள்ளார். எனினும் வேலைக்கு செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பந்தனா தனது மாமியாரை கொலை செய்துள்ளார்.

நண்பர்களின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டி 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்துள்ளார். இதன் பிறகு கார் மூலம் மேகாலயாவுக்குச் சென்று மலையில் இருந்து உடல் பாகங்களை இவரும் இவரது நண்பர்களும் வீசியுள்ளனர்.

பின்னர், இதே பாணியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி கணவரையும் கொலை செய்து, உடல் பாகங்களை அதே பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகளில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் பந்தனா கலிதா மற்றும் அவரது நண்பர்கள் தந்தி டெகா, அருப் தேகா ஆகிய 3 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





