நீண்ட நாட்களாக பெண் கிடைக்காமல் அவதிப்பட்ட நபர்.. வாழ்க்கையில் திடீர் என நடந்த மாற்றம்!!

524

கரூரில்..

கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி தம்பதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கும் நிலையில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

கரூர் மாவட்டம் வெங்கமேடு புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்ற சசிகுமார். மாற்றுத் திறனாளியான இவர் பி.காம் முடித்துவிட்டு சொந்தமாக சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

தற்போது அவருக்கு 40 வயதாகிறது. உயரம் குறைவானவர் என்பதால் பெண் கிடைக்காமல் பல வருடங்கள் திருமணத்திற்காக காத்திருந்தனர் இவரது குடும்பத்தினர்.

இதற்கு மத்தியில் இவருடைய தாய் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரை தனது மாமாவின் உதவியுடன் கவனித்தும் வந்திருக்கிறார் சசிகுமார். இந்த சூழ்நிலையில் சசிகுமாரின் மாமா சுப்பிரமணியன் கரூர் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று இருக்கிறார்.

அப்போது அங்கு உதவியாளராக பணியாற்றும் மாற்றுத் திறனாளி சாந்தியை பார்த்திருக்கிறார். சாந்திக்கும் அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடி வருவதை அறிந்து கொண்ட சுப்பிரமணியன் சசிகுமார் குறித்து அவர்களிடம் பேசி இருக்கிறார்.

அதன் பின்னர், சசிகுமார் சாந்தி வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர்.

அதன்படி இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சசிகுமார் வீடு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அதன் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு இரு தம்பதியை வாழ்த்தியிருக்கின்றனர்.

இந்நிலையில் மற்றவர்களை போல தாங்களும் நன்றாக வாழ்ந்துகாட்டுவோம் என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளனர் இந்த தம்பதி. இந்த சூழ்நிலையில் இவர்களது திருமண காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.