மோடியின் பதவியேற்புக்கு வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் சி.வி.விக்னேஷ்வரன்!!

581

CV

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளிவிவாகர அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,

கௌரவ பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அமைச்சரவர்களுக்கு,

இன்றைய திகதிய உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன்.

ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுணமே.

வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாண சபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இக் கூட்டுறவு சிந்தனையானது வரவேற்கத்தக்கதே.

எனினும் உங்களுடைய அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதேயாகும்.

எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாண சபையைப் பொறுத்த வரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும்.

இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். எனினும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத்தருகின்றேன்.

உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் எமக்குள் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.

அவ்வாறு தொடர்ந்தால்த்தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படுவன மட்டுமன்றி எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுவன.

நன்றி.
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்