ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்-மகன் : சுவாரஸ்ய பின்னணி!!

234

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தில் தாய் – மகன் ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் என்ற பகுதியில் காட்ஷில்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 41 வயதுடைய ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார்.

இவரது கணவர் விவசாயத் தொழில் செய்து வரும் இவர்களுக்கு பர்வேஸ் ஆலம் என்ற மகனும், பிர்தௌசி என்ற மகளும் உள்ளனர். இதில் மகள் பிர்தௌசி படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கும் நிலையில், தற்போது எம்.ஏ. வரை படித்துள்ளார்.

ஆனால் மகன் பர்வேஸ் ஆலமுக்கோ படிப்பின் மீது ஆர்வம் இல்லாதவராக இருந்துள்ளார். இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 10-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். அதே போல் தாயும் பல ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படிக்காமல் தனது படிப்பை நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மகள் பிர்தௌசி தனது தாய் மற்றும் சகோதரனை படிக்கும்படி கூறியுள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக பிர்தௌசி கூறி வந்த நிலையில், தாய் மற்றும் சகோதரன் படிக்க தொடங்கியுள்ளனர்.

அதன்படி அங்குள்ள மதரஸா பள்ளியில் இருவரும் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தாய் – மகன் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதினர்.

இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்வு எழுதிய தாய் ஆயிஷா கூறுகையில், “என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் என் மகள் படிக்கக் கற்றுக்கொண்டாள்.

அதனால் அவள் என்னையும் படிக்கும்படி அறிவுறுத்தினாள். நான் படித்தால் நன்றாக இருக்க முடியும் என்று கூறினார். அதனால் நான் உயர் மதரஸாவில் சேர்ந்தேன். தற்போது நான் என் மகனுடன் சேர்ந்து, படிக்க தொடங்கினேன். தற்போது இந்த தேர்வையும் நன்றாக எழுதி இருக்கிறேன்.

பல்வேறு இன்னல்களால் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள என்னைப் போன்றவர்களை படிக்கத் தொடங்க அறிவுறுத்துகிறேன்.” என்றார். இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

மகளின் முயற்சியால் தாய் மற்றும் மகன் பல ஆண்டுகளுக்கு பிறகு 10-,ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிகழ்வு மேற்கு வங்க பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தாயை ஊக்குவித்த மகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.