மன்னார்குடியில்..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

வேதாரண்யம் அருகே உள்ள காடன்சேத்தி கிராமத்தை சேர்ந்த இவரது உறவினரான நிஷா (17) செவிலியர் படிப்பு படித்து வந்தார். உறவினர்களான இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மன்னார்குடி அருகே பருத்திகோட்டை கிராமத்தில் உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு வந்த நிஷாவின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என பாரதிராஜாவின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர்.

மேலும் நிஷா காணவில்லை என வடுவூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இந்த நிலையில், மூவாநல்லுர் கிராமத்தில் காலை வயல்வெளிக்கு வேலைக்கு சென்றவர்கள் வயல் காட்டில் உள்ள மரத்தடி ஒன்றில் இரண்டு பேர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீசார் உயிரிழந்த இருவரிடமும் இளையராஜா மற்றும் நிஷா என உறுதிப்படுத்தி உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சமூகம் மற்றும் உறவினர்களான இளம் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் மூவாநல்லுர் கிராமத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




