
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து நேற்று பகல் ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த சர்வேஸ் அகமது (30) என்பவர் சுற்றுலா விசாவில் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் கடத்தல் பொருட்கள் எதுவும் இல்லை.
சந்தேகம் நீடித்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவரது ஆசனவாய் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.
அதன் மதிப்பு 9 லட்சம் ஆகும். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மேலும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற தஞ்சாவூரை சேர்ந்த முகமது கலீல் (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால் பணம் இருந்தது.
அதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல் அமீது (42) என்பவரின் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் ரூ.4 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாடு பணம் இருந்தது.
அந்த பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்துகின்றனர்.





