தாய்..

இந்த உலகத்தில் தாய், தந்தையரை போல ஒருவர் மீது அன்பு காட்டும் ஆட்கள் யாருமில்லை. தங்களது பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக தங்களின் வாழ்வில் நிறைய தியாகங்களை செய்து அவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று உழைக்கவும் செய்வார்கள்.

அதே போல, தங்களின் பெற்றோரின் தியாகங்களால் பல கடின உழைப்புகளுடன் வாழ்வில் முன்னேறும் பலரும், ஏணியாக இருந்து தங்களை உயர்த்தி விட்ட பெற்றோரை இன்னும் அழகு பார்க்க அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதோ அல்லது அவர்கள் வாழ்வில் அனுபவம் செய்யாத விஷயங்களை சர்ப்ரைஸாக செய்து ஆனந்தப்படுத்தவோ செய்வார்கள்.

இந்த உலகில் நமது பெற்றோர்களுக்கு நல்ல விஷயங்களை செய்வதை விட யாருக்கு செய்து அழகு பார்க்க போகிறோம். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தனது தாயின் 25 வருட கனவை நிறைவேற்றியது தொடர்பான வீடியோ பலரையும் மனமுருக வைத்து வருகிறது.

இது தொடர்பான வீடியோவில் அந்த இளம் பெண் தனியாக நகைக் கடைக்கு செல்கிறார். அங்கே தனது தாய்க்காக தங்க மாட்டல் ஒன்றை வாங்குகிறார். 25 வருடமாக அந்த இளம்பெண்ணின் தாயார் தங்க மாட்டல் அணிய வேண்டும் என்றும் கனவு கண்டுள்ளார்.

ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண்ணின் தந்தையால் அது நிறைவேறாமல் போயிருந்தது. இதனால், அதனை நிறைவேற்றவும் அந்த மகள் முடிவு செய்து தங்க மாட்டலை வாங்கி மிகவும் சர்ப்ரைஸாக தனது தாயிடம் காட்டவும் செய்கிறார்.

தொடர்ந்து அந்த பெட்டியை திறப்பது வரை உள்ளே என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தாய் முகத்தில் இருந்த சூழலில் அதனை திறந்து பார்த்து தங்க மாட்டல் இருப்பதை அறிந்ததும் அந்த தாயின் ரியாக்ஷன் தற்போது பலரையும் மனம் கலங்க வைத்தும் வருகிறது.

25 வருடமாக தன்னால் நிறைவேறாமல் போன விஷயத்தை தனது மகள் நிறைவேற்றியதை அறிந்ததும் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு முத்தம் கொடுக்கவும் செய்கிறார் அந்த தாயார்.

‘என்னால இந்த நகையை போடவே முடியல, கடைக்கு போய் பாத்துட்டு வந்துருவேன்’ என கண்ணீருடன் அவர் தெரிவிக்கும் சூழலில் அவரை கட்டியணைத்து மற்றொரு பக்கம் கண்ணீருடன் தேற்றவும் செய்கிறார் அவரது மகள்.

தனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் தான் படிப்பதற்கும், தான் வாழ்வதற்கும் பல்வேறு தியாகங்களை செய்துள்ள சூழலில், தனது தாயாருக்காக தன்னுடைய சொந்த பணத்தில் தங்க நகை வாங்கி கொடுத்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் அந்த மகள் குறிப்பிட்டுள்ளார்.





