காதல் விவகாரம் : கடிதம் எழுதிவைத்துவிட்டு காதலி எடுத்த விபரீத முடிவு : காதலன் உட்பட மூவர் கைது!!

522

சீர்காழியில்..

சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பிரபாவதி (20). இவர் சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பில் பயின்று வந்தார்.



இந்நிலையில் பிரபாவதி இன்று ( ஏப். 09 ) அதிகாலை தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் தற்கொலை செய்தபடி இறந்து கிடந்தார்.இதனை கண்ட அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இது குறித்து திருவெண்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து திருவெண்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

தொடர்ந்து, உயிரிழந்து கிடந்த பிரபாவதியின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் பிரபாவதி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் பிரபாவதி, தான் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தான் மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் அர்ஜுனன், அலெக்சாண்டர், அவரது அண்ணி ரஞ்சனி ஆகியோர் திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி மிரட்டியாதகவும், நீ செத்து விடு எனக் கூறியதாகவும் கடிதத்தில் பிரபாவதி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திருவெண்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அலெக்சாண்டர், ஆனந்தராஜ், ரஞ்சனி ஆகிய மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அர்ஜுனனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.