வவுனியாவின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!!

1389

பொன்னையா மாணிக்கவாசகம்

ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரையாசிரியராகவும் செயற்பட்டுவந்த பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் இன்று நள்ளிரவு (12.04.2023) 12.40 மணியளவில் காலமானார்.



நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து சர்வதேசமெங்கும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படுத்திவந்தார்.

அன்றைய நாட்களில் இரவு 9.15மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் தமிழோசை கேட்காமல் குறிப்பாக இலங்கை செய்திகளில் வடமாகாண செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்திகளையும் பெட்டகங்களையும் கேட்காமல் பலர் உறங்குவதில்லை.

கடந்த 01.04.2023 அன்று தனது 76ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியவர் இன்று அதிகாலை காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.04.2023 வியாழனன்று நடைபெறும்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் ஊடக நண்பர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.