பண்டிகைக் காலத்தில்..
புத்தாண்டு தினங்களில் போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக் கூடும் என்பதால் இவ்வாறு பணத்தைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது குறித்த பிரதேச பொலிஸாலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் புத்தாண்டு வர்த்தக கண்காட்சிகளை நடத்துவதற்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.