தேர்த் திருவிழா..
வவுனியாவில் தமிழ் சித்திரைப் புத்தாண்டு வழிபாடும், தேர்த் திருவிழாவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. சோபகிருது தமிழ் புத்தாண்டு இன்று (14.04) பிறந்த நிலையில் புத்தாண்டை வரவேற்று வவுனியா இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில், வவுனியா வைரபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், ஆலயத் தேர்த் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றது.
மருத்து நீர் வைத்து புத்தாண்டை அணிந்துவந்த பக்தர்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகப் பெருமான் உள் வீதி வலம் வந்து அதனைத் தொடர்ந்து வெளிவீதிக்கு வருகை தந்து தேரில் உலா வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது பக்த அடியார்கள் காவடி எடுத்தும், தீச் சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நிவர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், புத்தாண்டு வாழத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.