சென்னையில்..
வாயில் நுரை தள்ளியபடி கீழே இறந்து கிடக்கும் கர்ப்பிணி மனைவி. மின்விசிறியின் ஊக்கில், தூக்கில் தொங்கியபடி கணவன். என்ன செய்வது என தெரியாமல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அப்பார்ட்மெண்ட் வாசிகள்.
சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியிருந்தது இந்த மரணம். இது கொலையா? தற்கொலையா? இருவரின் இறப்புக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம்(24) என்பவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது காதல் மனைவி கமலா(18).
இவர்கள் இருவரும் அதே அபார்ட்மெண்டில் கீழே உள்ள அறையில் வசித்து வந்தனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த மாதம் தான் வானகரம் பைபாஸ் சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பிரேம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பிரேம் மனைவி கமலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பின் கேட் திறக்காமல் இருக்கவே, பிரேம் வசித்த அறையின் கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்த போது, மின்விசிறியில் தூக்கு மாட்டி பிரேம் இறந்து கிடந்தார்.
கமலா வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் தரையில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு பிரேம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவருமே தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பிரேமின் தாயார் சொப்னாதேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.