வவுனியாவில் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம்!!

1074

 

நாளையதினம் நடைபெறவிருக்கும் ஹர்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் (24.04.2023) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.



வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகிளையின் செயலாளர் ந.கருணாநிதி,

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.