திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

சதீஷ் பகுதி நேர வேலையாக அவ்வப்போது கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு சென்று வந்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் சிறிய தொகை மூலம் தனது செலவையும் அவர் சென்னையில் ஓட்டியுள்ளார்.

அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார்.

அந்த பெரிய பாத்திரத்தை தூக்கிக்கொண்டு அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார்.

இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசம் அண்டாவுக்குள் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





