கொல்கத்தா அணிக்கு பாராட்டு விழா : ரசிகர்கள் மீது தடியடி!!

428

KKR

கொல்கத்தா அணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் முடிந்த 7வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை வீழ்த்தி கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது முறையாக சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இதை முன்னிட்டு கொல்கத்தா அணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று பிரமாண்டமான பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவினை பார்ப்பதற்கு அனுமதி இலவசம் என்று கருதி காலை 9 மணியில் இருந்தே மைதானத்தின் முன்பு கூட்டம் அலை மோதியது.

60 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்திற்கு சுமார் 1 லட்சம் பேர் திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிசார் திணறினர்.

கொல்கத்தாவில் உள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் அங்கீகாரம் பெற்ற கழகங்களிடம் இருந்து இலவச சீட்டுகளை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

அதை கண்டுகொள்ளாமல்,ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். உடனடியாக மைதான கதவுகள் மூடப்பட்டதால் தள்ளுமுள்ளுடன் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் 2 பெண் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாக வந்தார். இதற்கு அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பனர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்தார். பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்களுக்கு தலா 10 கிராம் எடை கொண்ட தங்க நாணயம் வழங்கப்பட்டது.