
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், கடந்த ஐபிஎல் தொடரின் போது, ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள பிசிசிஐ நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சினிமாவில் தனது கவனத்தை செலுத்தப்போவதாக கூறி வந்த அவர், பிரபல இந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் நடனப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அதைப் பற்றி ஸ்ரீசாந்த் கூறியதாவது, எதுவும் நம்மைத் தடுத்து விட முடியாது. கிரிக்கெட் விளையாட்டை நான் இழந்துள்ளேன். வழக்கு முடியும் வரை பயிற்சியும் எடுக்க முடியாது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆட வாய்ப்பு கிடைத்த போது, எனது குடும்பத்தாரும், நண்பர்களும்தான் என்னை சம்மதிக்க வைத்தனர்.
எனது மனைவி கூட உங்களுக்குத்தான் நடனம் என்றால் ரொம்ப பிடிக்குமே, ஏன் உங்களது திறமையை வெளிப்படுத்தக் கூடாது என்றார்கள்.
எனக்கு பிரேக் நடனம், தெரு நடனம் ஆடத் தெரியும். ஆனால், தொலைக்காட்சி மேடையில் ஆடுவது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. பல விதமான நடனங்களை இதில் ஆட வேண்டியுள்ளது. ஆனாலும், எனக்கு சிறந்த பயிற்சியாளர் கிடைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
தற்போது ஸ்ரீசாந்த் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள அன்புள்ள அழகே என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.





