தஞ்சாவூரில்..

பட்டுக்கோட்டை அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில், கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(28). பிரிண்டிங் பிரஸ்சில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா(22). இருவருக்கும் கடந்தமே 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, சதீஷ் வீட்டில் தம்பதியர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலையில் இருந்த சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சுவிதா, உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், சதீஷ் வேலையை விட்டுவிட்டு, நினைத்த நேரத்தில் வீட்டுக்கு வரமுடியாது எனக் கூறிவிட்டு, வேலையைத் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, பிற்பகல் 3.45 மணியளவில் சதீஷை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட சுவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, வீடியோ அழைப்பை துண்டிக்காமலேயே தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன சதீஷ் உடனடியாக வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த சுவிதாவை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுவிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சோகமாக இருந்த சதீஷ் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் இருந்து சதீஷ் வெளியேறினார். பின்னர், வீட்டுக்குச் சென்று, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ( பொறுப்பு ) இலக்கியாவும் விசாரணை நடத்தி வருகிறார்.





