மத்திய பிரதேசத்தில்…

மத்திய பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடி சுட்டுக்கொலை செய்யப்பட்டு உடலை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்குட்பட்ட ரத்தன்பாசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகன் ராதேஷ்யாம் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இந்த புகாரை அடுத்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

பலமணி நேரம் நடந்த இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலுக்கு ஷிவானியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஷிவானி பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் காதலித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜூன் 3ம் தேதி ஷிவானி மற்றும் ராதேஷ்யாம் இருவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கிராமத்தின் அருகே இருந்த முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலிஸார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





