தோழியை பிரிய மனமில்லை.. திருமணம் செய்ய ஆணாக மாற ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1080

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் இளம்பெண் பூனம். இவரும், தோழியான பிரீத்தி என்ற இளம்பெண்ணும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இந்த நட்பு நெருக்கமாகி பிரிய மனமின்றி இளம்பெண்கள் இருவரும் காதலர்களாகினர்.

இதனிடையே, பிரீத்தியின் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. இளம்பெண்கள் காதலிப்பதால் பிரீத்தி திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளார். இதனால் திட்டம்போட்ட பெற்றோர், பிரீத்தியை லக்கிம்பூர் கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற சாமியாரிடம் அழைத்துச்சென்றனர்.

அங்கு, தனது மகளின் திருமணத்திற்கு பூனம் தடையாக இருப்பதாகவும், அவளை கொலை செய்தால் இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும் பிரீத்தியின் தாயார் ஊர்மிளா கூறியுள்ளார்.

இதற்காக முன்பணமாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார். இதில் புதிய திருப்பமாக பிரீத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பூனம், தான் ஆணாக மாற அதே சாமியாரை அணுகியுள்ளார்.

இந்த சூழலில் சாமியார் ராம்நிவாஸ், இளம்பெண்கள் பிரீத்தி, பூனம் ஆகியோரை தனியாக வரவழைத்து பின்னர் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். பூனத்தை மந்திரம் செய்து ஆணாக மாற்றுவேன் என்று ராம்நிவாஸ் உறுதியளித்து உள்ளார்.

ஆனால் இதற்காக பூனம் மட்டும் காட்டுப்பகுதிக்கு இன்னொரு நாள் தனியாக வரவேண்டும், அப்போது மந்திரம் செய்து மாற்றிவிடுவதாக கூறினார். இதனை நம்பி காட்டிற்கு சென்ற பூனத்தை, சாமியார் கொலை செய்து உடலை முட்புதரில் வீசினார்.

இந்த நிலையில் பூனம் காணவில்லை என்ற புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரீத்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சாமியார் விவகாரம் தெரியவந்ததால், காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர்.

அங்கு உடலை மீட்ட போலீசார் கொலை செய்த சாமியார் ராம்நிவாஸ், பிரீத்தி மற்றும் அவரது தாய் ஊர்மிளா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராம்நிவாஸ், பிரீத்தி கைது செய்யப்பட்ட நிலையில், ஊர்மிளா தலைமறைவானார்.