காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் நாகலுத்துமேடு பகுதியை சேர்ந்தவர் உதயராஜ். இவருக்கு கடந்த ஆண்டு செம்டர்பர் மாதம் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் இளம்ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி கருவுற்றார். நிறைமாத கர்பிணியாக இருந்த அவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்த அவருக்கு சுகபிரசவத்திற்காக செவிலியர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 9 மணியளவில்,மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில், செவிலியர்களே ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. அதன் பின்னரே மருத்துவர் வந்து ராஜேஷ்வரியை பரிசோதித்த நிலையில், அவர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக கர்ப்பப்பையை அகற்றினால் மட்டுமே ராஜேஷ்வரியை காப்பாற்ற முடியுமென கூறினர். பின்னர் அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.

இதனையெடுத்து ராஜேஷ்வரி சுயநினைவை இழந்து ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால் ஆத்திரமுற்ற உறவினர்கள், சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையெடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார நகர்நல அலுவலர் அருள் நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜேஸ்வரி பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கிருந்த ராஜேஸ்வரியின் பெற்றோர்கள், கணவர் உள்ளிட்ட யாரிடமும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக எவ்வித கையெழுத்தும் பெறாமலேயே தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்தது தான் அவரது உடல்நிலை மோசமானதுக்கு காரணம் என ராஜேஸ்வரியின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புகாரின் பேரில் போலீசார் மற்றும் மருத்துவத்தறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற அலட்சியமான போக்கு நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.





