கோவையில்..

கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக பணி முடிந்து மாலையில் வழக்கம் போல் பேருந்தில் வீடு திரும்பினார்.

அப்போது இளம்பெண்ணின் பக்கத்து இருக்கையில் இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், இளம்பெண்ணிடம் சேட்டை செய்யத் தொடங்கினார். மேலும் திடீரென பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

ஆனால் அந்த நபர் மீண்டும் வேறு கோணத்தில் நின்று கொண்டு மீண்டும் மீண்டும் ஆபாச செய்கை காட்டி தொல்லை கொடுத்ததால், ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளம்பெண் பேருந்து சென்றுக் கொண்டு இருக்கும் போதே சத்தம் போட்டுள்ளார்.

இதனால் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், உஷாரான அந்த நபர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க முயன்றார். எனினும் பேருந்தில் பயணம் செய்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் இளம்பெண், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் பொதுமக்களும் சேர்ந்து அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இளம்பெண் புகார் அளிக்க மறுத்ததால் அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

விசாரணையில், அவரது பெயர் லாரன்ஸ் (50) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





