மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்… காவல்நிலையத்தில் சரண்!!

795

உத்தரப் பிரதேசத்தில்..

காவலரின் மனைவியின் தலையை அவரது மாமனாரே துண்டாக வெட்டி காவல்நிலையத்தில் தாமாக வந்து சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங். 62 வயதான ரகுவீர் சிங்கிற்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி மாமனார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.

ரகுவீரின் இளைய மகனான கவுரவ் சிங் பருக்காபாத் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக உள்ளார். கவுராவிற்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் இரு மருமகள்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த சண்டை மாமனார் ரகுவீருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இளைய மருமகள் பிரியங்கா விதவையாக இருக்கும் தனது மூத்த மருமகளிடம் சண்டை போடுவதை ரகுவீர் தட்டி கேட்டு வந்துள்ளார்.

இவ்வாறு கடந்த திங்கள்கிழமை ஜூன் 26ஆம் தேதி இரவு இதே போல இரு மருமகள்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இடையே புகுந்த மாமனார் ரகுவீரை இளைய மருமகள் பிரியங்கா தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இரவு நடந்த சம்பவத்தால் அவமானம் தாங்காமல் ரகுவீர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மறு நாள் காலை பிரியங்கா சமைத்துக் கொண்டிருந்த போது ரகுவீர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பிரியங்காவின் தலையில் வீசி துண்டாக்கியுள்ளார்.

பின்னர் அங்குள்ள காவல்நிலையத்தில் ரத்தக் கறையுடன் சென்று தாமாகவே சரணடைந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது பிரியங்காவின் கணவர் கவுரவ் தனது காவல்நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.

தொடர்ந்து பிரியங்காவின் உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. சம்பவம் தொடர்பாக மாமனார் ரகுவீரை சிறையில் அடைத்து விசாரித்து வரும் போலீசார், எப்ஐஆரில் கணவர் கவுரவ் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளது.